ஷியாமளா நவம். வல்வெட்டித்துறை: நான்காவது பரிமாணம், தெணியகம், பொலிகண்டி, 1வது பதிப்பு, 2017. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
120 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 300., அளவு: 18.5×13 சமீ., ISDN: 978-956-7295-00-8.
இன்றைய காலகட்டத்தில் உடல்நலத்துடன் நீண்டகாலம் வாழ்வதற்குத் தடையாய் உள்ள விடயங்கள் குறித்தும் அந்தத் தடைகளை எவ்வாறு உடைத்தெறிய முடியும் என்பது பற்றியும் வாசிப்போரை சிந்திக்கத் தூண்டும் வகையில் ஆசிரியர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. உணவுகள், ஊட்டச்சத்துகள், மூலிகைகள், வாழ்வியல் விழுமியங்கள், எவ்வகையில் மனித வாழ்வுக்கு உதவும் என்பதனை மிக விரிவாகவும் விளக்கமாகவும் பன்னிரண்டு கட்டுரைகளில் தந்துள்ளார். மேல்நாட்டு வைத்திய, வாழ்க்கை முறைகளில் அதீத மோகம் கொண்டியங்கும் இன்றைய சமூகத்தை மாற்றியமைக்க இக்கட்டுரைகள் பயன்படக்கூடியவை. உணவெனும் உன்னதம், நோய்களைப் பெருக்கி ஆயுளைச்சுருக்கி, உணவே மருந்தாம், வள்ளுவம் சொல்லும் வைத்தியம், எனக்கென்ன பைத்தியமா?, தெளிந்த மனமே திண்ணிய உடலின் திறவுகோல், இனிப்புக்கேன் இப்படியோர் இழிபெயர், எமக்கு நாமே எமனாகலாமா?, இரசாயன மருந்துக் குளிசைகளின் மறுபக்கம், நோய்கள், மருந்துகள் மீதான பார்வைகளும் பயங்களும், மருந்தில்லா மருத்துவங்கள் சில, நலன் எனும் நற்பேறு ஆகிய தலைப்புக்களில் பன்னிரு கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.