டி.அஜித்ராம் பிரேமிள். சென்னை 600 034: த்ரிகோணேஷ் பிரசுரம், 41, முதலாவது தெரு, காமராஜபுரம், நுங்கம்பாக்கம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1993. (சென்னை 600094: ஜென்னிபாம், வன்னியர் இரண்டாவது தெரு, சூளைமேடு).
80 பக்கம், விலை: இந்திய ரூபா 12.00, அளவு: 18×12.5 சமீ.
1972இல் டெல்லியில் எழுதப்பட்ட இந்நாடகம், 1976இல் மதுரையில் பாலம் பத்திரிகையில் பிரசுரமானது. எழுத்துலகப் பிரவேசத்தின் ஆரம்பத்தில் தருமு சிவராம் என்றும், பின்னாளில் பிரமிள் என்றும் அறியப்பட்ட இவர், சி.சு.செல்லப்பா நடத்திய ‘எழுத்து’(1959-70) இதழின் மூலம் இளம் வயதிலேயே ஒரு பேராற்றல்மிக்க படைப்பு சக்தியாகவும் விமர்சன சக்தியாகவும் வெளிப்பட்டவர். தன்னுடைய 20-வது வயதில் ஓர் அபூர்வ ஞானச் சுடராக, ஈழத்தின் திருகோணமலையிலிருந்து எழுத்துப் பிரவேசம் நிகழ்த்தியவர். 1939, ஏப்ரல் 20-ல் பிறந்த இவரின் முதல் கவிதை, 1960 ஜனவரி ‘எழுத்து’ இதழில் பிரசுரமானது. இதிலிருந்து ஆரம்பம் கொண்ட இவருடைய எழுத்தியக்கம், சிறுபத்திரிகை இயக்கத்தில் ஒரு திகைப்பூட்டும் சக்தியாக எழுச்சி கொண்டது. தன்னுடைய 23-வது வயதில் ‘மௌனி கதைகள்’ நூலுக்கு, திருகோணமலையில் இருந்து இவர் எழுதிய முன்னுரை, அவருடைய இலக்கிய மேதமைக்கும், தமிழகத்தில் அது அறியப்பட்டிருந்ததுக்குமான பிரத்தியேக அடையாளம். நட்சத்ரவாசி நாடகம் இலங்கையிலும் இங்கிலாந்திலும் பாலேந்திரா நாடகக் குழுவினரால் அரங்கேற்றப்பட்டது. டில்லியில் நடப்பதாக இந்நாடகக்கதை அமைந்துள்ளது. ஓர் அறைக்குள் நிகழும் ஒரே காட்சியாக இது எழுதப்பட்டிருப்பினும் உலகளாவிய அளவில் விவாதிக்கப்படும் மனித உறவு, பாலியல், பெண்விடுதலை எனப் பல தளங்களில் இயக்கம் கொள்கிறது. பிரமிள் கவிதைகளில் காணப்படுகிற நுண்ணசைவுகளும் படிமங்களும் இந்த நாடக ஆக்கத்திலும் நிறைந்திருக்கின்றன. கண்ணாடி பிம்பங்களைத் தம் ‘கண்ணாடியுள்ளிருந்து’ எனும் கவிதையில் குறியீடுகளாகப் பதிவு செய்யும் பிரமிள் இந்நாடகத்தில் நிழலுருவங்களைக் குறியீடுகளாகப் பயன்படுத்துகிறார். பொம்மலாட்டக் கூத்தின் நிழலாட்டங்களை நாடக பாணியில் இணைத்திருக்கிறார்.