செ.கணேசலிங்கன். சென்னை 600026: குமரன் பதிப்பகம், 3 மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி, 7வது தெரு, வடபழநி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2010. (சென்னை: சிவம்ஸ்). 176 பக்கம், விலை: இந்திய ரூபா 70., அளவு: 18×12.5 சமீ. “தீவிரவாதி” என்ற வார்த்தை இன்று முதலாளித்துவ ஊடகங்களில் பரவலாகப் பேசப்படுகின்றது. இன்றைய சமூக அமைப்புக்கு எதிராகச் செயல்படுபவர் அனைவரும் தீவிரவாதி என்ற வரையறைக்குள் எளிதாகப் பொருந்தி விடுகின்றனர். இந்நாவலின் கதாநாயகன் குணசேகரன் கோவை கிராமத்தில் பிறந்து, நகரில் கல்வி கற்று, வக்கீல் தொழிலைவிட்டு அரசியல் தொழிற்சங்கப் பணியில் ஈடுபடுகிறான். அண்ணன் வற்புறுத்தியபடி முறைப்பெண்ணான முத்தம்மாவை ஒப்பந்தத்துடன் மணக்கிறான். ஒரு குழந்தையுடன் முத்தம்மாவை விட்டு அரசியல், தொழிற்சங்கப் பணியில் சிறை செல்கிறான். பெண்ணியம், பாலியல், சினிமா, தொழிற்சங்கம், உலக அரசியல் யாவிலும் புதிய புரட்சிகரக் கருத்துக்களைக் கூறுகின்றான். தலைமறைவு வாழ்வு, நீண்ட சிறைவாசத்தின் பின்னர் மீண்டும் தொழிலாளியாக, தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபடுகிறான். கல்லூரி நண்பன் சினிமா டைரக்டர் முருகேசன், பெண்ணியம் கற்கும் விடுதலை பெற்ற பெண் நந்தினியும் அவனோடு இணைகின்றனர். குணசேகரனின் கதையே இங்கு தீவிரவாதி நாவலின் கருவாகின்றது.