7103 ஞானப்பள்ளு.

ஆ.சதாசிவம் (பதிப்பாசிரியர்). கொழும்பு 13: எம்.ஏ.ரகுமான், அரசு வெளியீடு, 231 ஆதிருப்பள்ளித் தெரு, 1வது பதிப்பு, நவம்பர் 1968. (கொழும்பு 13: ரெயின்போ பிரிண்டர்ஸ், 231 ஆதிருப்பள்ளித் தெரு).

Lxx, 102 பக்கம், விலை: ரூபா 6.00, அளவு: 19×13 சமீ.

இந்நூல் யாழ்ப்பாணத்துக் கத்தோலிக்க கிறிஸ்தவப் புலவர் ஒருவரால் 17ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகும். இதன் காலம் கி.பி.1642 என்று நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் குறிப்பிடுகிறார். துர்அதிர்ஷ்டவசமாக நூலாசிரியரின் பெயர் தெரியவில்லை. கிறிஸ்து பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு மருதநில மக்கள் வாழ்க்கையைச் சித்திரித்துக்காட்டும் இந்நூல் 250 வருடங்களாக ஏட்டுருவிலிருந்து 1904இல் முதலில் அச்சுருவில் வெளிவந்தது. இது சில்லாலை பண்டிதர் ஸ்ரீ ச.அந்தாம்பிள்ளை அவர்கள் கேள்விப்படி பழைய ஏட்டுப் பிரதிகளிலிருந்து எடுக்கப்பட்டு ஸ்ரீ வ.லோ.அமிர்தநாதபிள்ளை அவர்களால் தமது தைரியநாத அச்சியந்திரசாலையில் அச்சிடப்பட்டது. மூத்தபள்ளி (செருசலைப்பள்ளி), இளையபள்ளி (ரோமைப்பள்ளி), பள்ளன் (தன்மகுணப்பள்ளன்), பண்ணைக்காரன் ஆகிய நால்வருமே இந்நூலில் தோன்றி நடிக்கும் பாத்திரங்கள். இவர்களுள் மூத்த பள்ளி, பள்ளன் ஆகிய இருவரும் கிறிஸ்து பெருமானின் பிறப்பிடமாகிய செருசலை (Jerusalam) நாட்டவர். இளையபள்ளி கத்தோலிக்க திருச்சபையினதும் போப்பாண்டவரினதும்  தலைமைப்பீடமான உரோமாபுரி நாட்டவள். பண்ணைக்காரன் உரோமாபுரியென்னும் பண்ணை வயலுக்கு உரிமையாளன். இந்நால்வருள் பள்ளனின் மனைவியரான மூத்தபள்ளி, இளையபள்ளி ஆகிய இருவரைச் சுற்றியுமே கதை வளர்கிறது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2405).

ஞானப்பள்ளு.

ஆ.சதாசிவம் (பதிப்பாசிரியர்), திருஞானேஸ்வரி சதாசிவம் (மீள்பதிப்பாசிரியர்). அமெரிக்கா: சதாசிவம் பதிப்பகம், பேதெஸ்டா, மேரிலான்ட், 2வது பதிப்பு, 2918, 1வது பதிப்பு, நவம்பர் 1968. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48B, புளுமெண்டால் வீதி).

Lxx, 104 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×16 சமீ., ISBN: 978-955-0210-16-9.

வெளியீட்டுரை, பதிப்புரை, பள்ளுப் பிரபந்தத்தின் தோற்றமும் வளர்ச்சியும், ஞானப்பள்ளு நூலாராய்ச்சி ஆகியன நூலின் ஆரம்பப் பகுதியாகவும், கடவுள் வணக்கம், காப்பு, அவையடக்கம், ஆசிரியர் வணக்கம், தரு ஆகியன நூலின் அடுத்த பகுதியாகவும் அமைகின்றன. தொடர்ந்துவரும் பிரதான பகுதியில் உழத்திப் பாட்டு-பள்ளன் பள்ளி தோற்றம், இளையபள்ளி தோற்றம், பள்ளன் தோற்றம், இளையபள்ளி தற்புகழ்ந்து பாடி மகிழ்தல், பள்ளியர் பெயர்ப் பெருமை கூறல், நாட்டு வளம், பள்ளியர் தலைவன் பெருமை கூறல், குயில் கூவல், மழை பெய்ய வரங்கேட்டல், மழை பொழிதல், ஆற்றில் வெள்ளம் வருதல், பண்ணைக்காரன் தோற்றம், பள்ளியர் பண்ணைக்காரனை வணங்கல், மூத்தபள்ளி பண்ணைக்காரனிடம் முறையிடுதல், இளையபள்ளி எதிர்மாற்றங் கூறுதல், பண்ணைக்காரன் பள்ளனிடம் பண்ணைக் கணக்குக் கேட்டல், பள்ளன் கணக்குக் கூறல், மூத்தபள்ளி முறையீடு, பண்ணைக்காரன் பள்ளனை வினாவுதல், பள்ளன் மறுமொழி கூறல், பண்ணைக்காரனிடத்திற் பள்ளன் முறையீடு, மூத்தபள்ளி குட்டையிலடைக்கப்பட்ட பள்ளனுக்கு வருந்திப் பரிந்துரை செய்து பண்ணைக்காரனை வேண்டல், பள்ளன் வயலுழும்போது எருதுமுட்ட மூர்ச்சித்து விழுதல், மூத்தபள்ளி புலம்பல், மூத்தபள்ளி புலம்பப் பள்ளன் எழுந்திருத்தல், நாற்று நடுகை காணவருமாறு பள்ளியர் பண்ணைக்காரனை வேண்டுதல், நாற்று நடுதல், அரிவி வெட்டுதல், சூடடுக்குதல், பள்ளிகள் ஒருவரையொருவர் ஏசல் ஆகிய அத்தியாயத் தலைப்புகளில் ஞானப்பள்ளு பாடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்