கதிர்காமர் (மூலம்), எம்.எஸ்.துரை (பதிப்பாசிரியர்). கரவெட்டி: அமரர்கள் முருகேசு வேலுப்பிள்ளை, வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை ஆகியோர் நினைவு வெளியீடு, பூம்புகார், கரவெட்டி கிழக்கு, (கொழும்பு முகவரி: 245/1 காலி வீதி, பம்பலப்பிட்டி, கொழும்பு 4), 3வது பதிப்பு, 2011, 1வது பதிப்பு, 1887?, 2வது பதிப்பு, 1936. ( கொழும்பு 6: குளோபல் கிரபிக்ஸ், 14, 57வது ஒழுங்கை, வெள்ளவத்தை).
(6),103+67 பக்கம், வண்ணத்தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ.
யாழ்ப்பாணக்குடாநாட்டைத்தளமாகக் கொண்டு எழுந்த கும்மிப்பாடல்களுள் ஒன்றே யாழ்ப்பாண உத்தியோகர்லக்ஷணக் கும்மியாகும். பொதுவாக ஈழத்தில் எழுந்த செந்நெறி இலக்கியங்கள் காட்டாத, காட்டத்தவறிய, காட்டவிரும்பாத பல்வேறு சமூகச்செய்திகளைத் துல்லியமாகக் காட்டும் ஓர் இலக்கிய வடிவமாகக் கும்மிபாடல்களைக் கொள்ளலாம். அவ்வகையில் வண்ணார்பண்ணை ஓட்டுமடத்தில் வசித்த தம்பிப் பரிகாரியாரின் மகனாகிய அப்பா என்று வழக்கத்தில் அழைக்கப்பட்டுவந்த கதிர்காமர் என்பவரால் 1887ஆம் ஆண்டுவாக்கில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் இக்கும்மிப்பாடல் யாழ்ப்பாண மன்னர்கள் காலம் தொடங்கி யாழ்ப்பாணத்திற்குப் புகையிரதப்பாதை வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்படும் வரையுள்ள செய்திகளை – சேர். பொன்னம்பலம் இராமநாதன் யாழ்ப்பாணத்துக்கு விஜயம்செய்த செய்தி- வரை வரலாற்று ஒழுங்கிலே கூறிச் செல்கின்றது. கி.பி.1200ம் ஆண்டுமுதல் உள்ள தமிழரசர் காலம், பறங்கி, உலாந்தா காலம் என்பவைகள் சுருக்கமாகவும், 1795ம் ஆண்டில் ஆங்கிலேயர் உலாந்தரை வெற்றிகொண்டுவந்தது முதல் உள்ள வரலாறு இயன்றவரை விரித்தும் உரைக்கப்பட்டுள்ளது. இது ஆங்கிலேயர் காலத்தில் மோயாட், லேயாட், டயீக், பிறைஸ், கிப்சன், போல், மறை, மோவியு, றசல், துவைனம், என்னும் அரசாட்சி ஏஜன்ட்மார்களின் காலநடவடிக்கைகளையும் அவ்வக்காலங்களில் அவர்களின் உதவியாளராகவிருந்த எம்மவர்கள் பற்றியும் அவர்கள் செய்த நன்மைதீமைகள் பற்றியும், அக்காலகட்டத்தின் யாழ்ப்பாண நிலைமை பற்றியும் கூறுகின்றது. முதற்பதிப்பு விபரமில்லாதபோதிலும் இதன் இரண்டாம் பதிப்பை தான் சிதைந்தநிலையில் கண்டெடுத்த முதலாம் பதிப்பிலிருந்து 24.9.1936 அன்று கொக்குவில் கிழக்கில் வதியும் எம்.எஸ்.துரை என்பவர் கொக்குவில் சோதிடப்பிரகாசயந்திரசாலையில் அச்சிட்டு வெளியிட்டிருக்கிறார். அப்பிரதியின் மீள்பதிப்பே இதுவாகும். ஆங்கிலக்கல்வி முறையினால் அரச உத்தியோகம் பெற்றவர்களின் நடைமுறைகளை அவர்களின் பெயர்களைச்சுட்டி, பல கும்மிப்பாடல்கள் எள்ளலுடன் விமர்சனம் செய்கின்றன. யாழ்ப்பாணத்து ஆட்சியதிகார வரன்முறையையும் அவற்றின் வலுவையும் மெலிவையும் புலப்படுத்தவென்றே யாழ்ப்பாண உத்தியோகர்லக்ஷணக் கும்மி படைக்கப்பட்டுள்ளதுபோன்ற உணர்வை வாசகரிடம் ஏற்படுத்துகின்றது. ஏறத்தாழ 579 பாடல்களைக்கொண்ட இவ்விலக்கியம் இந்நூலின் முதலாம் பகுதியாக அமைகின்றது. இந்நூலின் இரண்டாம் பகுதியில் யாழ்ப்பாணத்துத் தேசவழமைகள் (உலாந்தாக் கொம்பனியார் காலத்துத் தேசவழமைகளுங் கட்டளைகளும்) தமிழ்வடிவம் தரப்பட்டுள்ளது.