லோறி முத்து கிருஷ்ணா (மூலம்), சாரல்நாடன் (பதிப்பாசிரியர்). கொட்டகலை: சாரலகம், இல.60, ரொசிட்டா வீடமைப்புத் திட்டம், 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (ஹட்டன்: அம்மன் கிரியேஷன்ஸ்).
74 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 19×13 சமீ. ISBN: 978-955-8589-19-9.
இலங்கை தேசிய காங்கிரஸ் தொடங்குவதற்கு ஓராண்டுக்கு முன்னர் இலங்கையில் இயங்கிய இந்தியர் சங்கத்தின் தலைவராகவிருந்து பணியாற்றியவர் லோறி முத்துகிருஷ்ணா. 3.6.1918முதல் வெளிவரத் தொடங்கிய தமிழ்த் தினசரியான ஜனமித்திரன் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராகவும் இவர் பணியாற்றியவர். அவ்வேளையில் அதன் ஆசிரியராக எம்.ஏ.பீரிஸ் பணியாற்றினார். மூன்றாண்டுகள் தொடர்ந்த ஜனமித்திரனின் தலையங்கங்கள் அவ்வப்போது இந்தியாவில் பிரபல பத்திரிகையான சுதேசமித்திரனில் மீள்பிரசுரம் செய்யப்பட்டிருந்தன. ஜனமித்திரனில் லோறி முத்துக்கிருஷ்ணா எழுதிய முக்கிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைகின்றது. இலங்கையின் எதிர்கால ராஜீய வாழ்வு, இந்தியர்களின் நலவுரிமைகள், தொழிலாளர் இயக்கம், கூலியாட்களின் நிலைமை, படித்த வகுப்பார், சீர்திருத்த விரோதிகள், இலங்கை இந்திய அசோசியேஷன், இலங்கை லேபர் கமிஷன், மிஸ்டர் சீ.எப்.அண்ட்ரூசின் விஜயம், தப்பான எண்ணம், அந்தரங்கம் ஏனோ, தொழிலாளர் இயக்கம், இலங்கை நெஷனல் காங்கிரஸ், போலித் தலைவர்கள், சிலோனில் இந்தியத் தொழிலாளர்கள் ஆகிய தலைப்புகளில் இவர் எழுதிய 15 கட்டுரைகள் இங்கு தொகுக்கப்பெற்றுள்ளன. ஜனமித்திரன் தினசரி வெளியாகி 93 ஆண்டுகளின் பின்னர் அவர் எழுதிய கட்டுரைகள் இங்கு மீள்பிரசுரமாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.