இ.தியாகலிங்கம். சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 சக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு, 1வது பதிப்பு, ஜுலை 2011. (சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 சக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு).
344 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ., ISBN: 978-81-89748-93-7.
நூலாசிரியர் தற்போது புலம்பெயர்ந்து நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் வாழ்ந்துவருகிறார். 1994இல் அழிவின் அழைப்பிதழ் என்ற நாவலினூடாக இலக்கிய உலகில் அறிமுகமான இவர், நாளை, பரதேசி, திரிபு ஆகிய வெற்றிகரமான நாவல்களை தொடர்ச்சியாக வெளியிட்டவர். இரண்டு தலைமுறைகளின் கதைகூறும் இந்நாவலின் ஒரு பகுதி சுபனின் தந்தையாக வாழும் நோர்வே நாட்டில் நிகழ்கின்றது. அடுத்தது மகன் தேவனாய் வாழ்ந்த காரைநகரிலே நிகழ்கின்றது. பொன்னாலைப் பாலம் தொடுப்பதினாலே நகரான ஒரு தீவின் செழுமைகளும் பெருமிதங்களும் இக்கதையில் பேசப்படுகின்றன. அம்மண்ணின் மக்களின் அரசியல் சார்பு அவர்களைப் பாதித்த தமிழினப் பிரச்சினைகள் ஆகியன பிரச்சாரத் தொனியின்றி சொல்லப்படுகின்றன. முக்கியமாக- இந்நாவல் வரலாற்றினை நேர்செய்யும் ஒரு இலக்கிய ஆவணமாகவும் அமைகின்றது. எண்பதுகளின் விடியலிலே தோன்றிய புளொட் விடுதலைப் போராட்ட அமைப்பு உமா மகேஸ்வரனின் தலைமையில் நம்பிக்கை தரும் ஒரு அமைப்பாக வளர்ந்ததும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் புளொட் அமைப்புக்குமிடையே நடைபெற்ற சகோதரப் போராட்டம், படுகொலைகள் என்பனவும் இங்கே பேசப்படுகின்றன. அந்த இயக்கம் எவ்வாறு செயலற்றுப் போனது என்ற கேள்விக்கு இலக்கிய ஆதாரமாக இந்நாவல் அதன் உள்வீட்டுப் பிள்ளையின் பார்வையில் அமைகின்றது. அந்த இயக்கத்தில் இணைந்து இந்திய மண்ணுக்குச் சென்று ஆயுதப் பயிற்சிபெற்ற இயக்க வீரர்களுள் ஒருவரான தியாகலிங்கம் (நாவலாசிரியர்) தன்னை இந்நாவலில் முதன்மைப்படுத்தாது, ஓர் இயக்கத்தின் மறைவினை மிக நுட்பமாகச் சொல்கிறார். ஒரத்த நாட்டில் அமைந்த அதன் முகாம் இந்நாவலில் மிக யதார்த்தமாகச் சித்திரிக்கப்படுகின்றது.