விஜிதா சிவபாலன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36வது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36வது ஒழுங்கை).
xiv, 141 பக்கம், விலை: ரூபா 450.00, அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-287-0.
இந்நூல் கணேசலிங்கனின் வர்க்க முரண்பாட்டு நாவல்களின் பங்களிப்புகளை தெளிவுபடுத்தி ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளையும் மனநிலைகளையும் எழுச்சிகளையும் போராட்டங்களையும் விளக்கி ஈழத்து மார்க்சிய நோக்கு நாவலாசிரியர்கள் மத்தியில் கணேசலிங்கனுக்குரிய இடத்தினை மதிப்பிடுகின்றது. செ.கணேசலிங்கனின் வாழ்க்கைப் பின்னணியும் எழுத்து முயற்சிகளும், ஈழத்தில் வர்க்க முரண்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களும், ஈழத்துத் தமிழ் நாவல்களும், செ.கணேசலிங்கன் நாவல்களில் வர்க்க முரண்பாடுகள், செ.கணேசலிங்கனின் வர்க்க முரண்பாட்டு நாவல்கள்-மதிப்பீடு, தொகுப்புரை ஆகிய ஐந்து இயல்களில் இந்நூல்; எழுதப்பட்டுள்ளது. விஜிதா சிவபாலன் யாழ்ப்பாணம் வடமராட்சி கொற்றாவத்தை என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தனது ஆரம்பக் கல்வியை பொலிகண்டி இந்து கலவன் பாடசாலையிலும் உயர் கல்வியை நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்திலும் பெற்றவர். பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைச் சிறப்பு கலைமாணிப்பட்டத்தைப் பெற்ற இவர் அதே பல்கலைக்கழகத்தில் சிறிதுகாலம் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றியவர். தற்போது இலங்கை மன்றக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார் .