தா.சண்முகநாதன் (புனைபெயர்: சோக்கெல்லோ சண்முகம்). கனடா: மொன்றியல் இரா.நடராஜா, 5871, Victoria Avenue, Suite 222, Montreal, Quebec, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
viii, 178 பக்கம், வண்ணப் புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×13 சமீ.
1973இல் அண்ணை ரைற் என்ற தனி நடிப்பு முயற்சியின்மூலம் ஈழத்துக் கலை உலகில் அறிமுகமாகியவர் கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் பாலச்சந்திரன் (கே.எஸ்.பாலச்சந்திரன் 10.7.1944-26.2.2014) பின்னாளில் புலம்பெயர்ந்து கனடாவில் வசித்த அவரது வாழ்க்கை வரலாறு இந்நூலாகும். அவர் உயிருடன் இருந்த வேளையில் வெளியிடப்பெற்றது. இலங்கையிலும், புகலிடத்திலும் மேடை, நாடக, வானொலி, திரைப்பட, தொலைக்காட்சி நாடகக் கலைஞராகத் தம் திறமையை வெளிக்காட்டியவர். இலக்கியத்துறையிலும் பரிணமித்த இவரது கரையைத் தேடும் கட்டுமரங்கள் (2009), நேற்றுப்போல் இருக்கின்றது (2011) ஆகிய இரு நூல்களும் பிரபல்யமானவை. வாடைக்காற்று, நாடு போற்ற வாழ்க, அவள் ஒரு ஜீவநதி, சர்மிளாவின் இதயராகம், Blendings ஆகிய திரைப்படங்களில் முக்கிய பாகமேற்று நடித்தவர். அமுதன் அடிகளார் அறக்கட்டளை விருது, கனடா தமிழர் தகவல் விருது, உலக பண்பாட்டியக்க விருது, உதயன் சர்வதேச விருது, சுயாதீன கலை திரைப்பட இயக்கத்தின் வாழ்நாள் விருது உள்ளிட்ட பல விருதுகளை தன் வாழ்நாளில் பெற்றவர். இவரது வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ள சோக்கெல்லோ சண்முகமும் மூத்த ஈழத்துக் கலைஞர்களுள் குறிப்பிடத்தக்கவர். தனது 24வது வயதில் கோமதியின் கணவன் என்ற சமூக நாவலை எழுதி வெளியிட்டவர். இலங்கை அரசின் கலாபூஷணம் விருது, மற்றும் தேசத்தின் கண், சமாதான நட்சத்திரம் போன்ற விருதுகளையும் பெற்றவர். மேடைப் பேச்சாளராகவும், நடிகராகவும், வானொலிக் கலைஞராகவும், வில்லிசைக் கலைஞராகவும் தாயகத்திலும், புலம்பெயர்நாடுகளிலும் அறியப்பெற்றவர். ஒரு கலைஞனின் பார்வையில் மற்றொரு கலைஞனின் வாழ்க்கை வரலாறு இந்நூலில் விரிவாகப் பதிவுபெற்றுள்ளது.