நா. முத்தையா. ஏழாலை: ஆத்மஜோதி நிலையம், 2வது பதிப்பு, 2005, 1வது பதிப்பு, 1973. (யாழ்ப்பாணம்: ஜய்ராம் பிரின்டர்ஸ், 351, மணிக்கூண்டு வீதி).
xx, 96 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 120., அளவு: 20.5×14.5 சமீ.
சித்தர்கள் சாதாரண மக்களால் செய்யமுடியாத பல அரிய செயல்களைச் செய்வார்கள். அவற்றை அற்புதங்களாகப் பொதுமக்கள் போற்றுவர். சித்தர்கள் அட்டமா சித்திகள் எனப்படும் எட்டுவகைச் சித்திகள் பெற்றிருப்பார்கள் எனப் புராணங்கள் கூறும். திருமூலர் தொடங்கி குதம்பைச் சித்தர் கோரக்கர் வரை தமிழ்நாட்டில் சித்தர்கள் பதினெண்மர் இருந்தனரென்று கருதப்படுகின்றது. இவர்களுக்குப் பின்னர் இவர்கள் வழியைப் பின்பற்றிய பல சித்தர்கள் தமிழகத்தில் தோன்றியிருக்கின்றார்கள். அத்தகைய சித்தர்களில் நால்வர், ஈழத்துக்கு வந்து சித்துக்கள் நடத்தி, ஈழத்தின் வடக்கே யாழ்ப்பாணத்தில் நீராவியடியிலும் மேற்கே கொழும்பு முகத்துவாரத்திலும் கிழக்கே காரைதீவிலும் மோனநிலை எய்தினார்கள். அவர்களே முறையே கடையிற் சுவாமிகள், நவநாதசித்தர் பெரிய ஆனைக்குட்டி சுவாமிகள், சித்தானைக் குட்டி சுவாமிகள்ஆகியோராவர். அந்நால்வருள் கடைசி மூவரைப் பற்றியது இந்நூலாகும். ஐம்பது சுவைமிகு அத்தியாயங்களினூடாக இச்சித்தர்களின் வரலாற்றையும் அவர்கள் மேற்கொண்ட சித்துகளையும் தேடித்தொகுத்து இந்நூலை ஆத்மஜோதி ஆசிரியர் நா.முத்தையா அவர்கள் ஆக்கியிருக்கின்றார். இந்நூல் பேராசிரியர் சு.வித்தியானந்தனின் முன்னுரையுடன் கூடியது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 204792).