சுபதினி ரமேஷ். யாழ்ப்பாணம்: மொழியியல் ஆங்கிலத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2005. (யாழ்ப்பாணம்: பரணன் அசோஷியெற்ஸ் பிரைவெற் லிமிட்டெட்).
(10), 410 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×15 சமீ., ISBN: 955-8435-01-X.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் திரட்டப்பெற்ற ஈழத்துத் தமிழில் வழங்கப்பெறும் சிறப்புச் சொற்கள் தொகுக்கப்பெற்று இந்நூல் வெளிவந்துள்ளது. இத்தொகுப்பு முயற்சி தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகம் 1984ம் ஆண்டு மேற்கொண்ட தொகுப்பின் ஓரங்கமாக இலங்கைத் தமிழ் வழக்குச் சிறப்புச் சொற்கள் என்ற தலைப்பின்கீழ் பேராசிரியர் சு.சுசீந்திரராஜா, பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை ஆகியோரின் பொறுப்பிலும் வழிகாட்டுதலிலும் க.கமலாசனி, ப.கிருபானந்தி, செ.சுபதினி ஆகியோருடன், மேலும் பல கலைத்துறை மாணவர்களின் அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் அறுவடையாகும். முதல் 180 பக்கங்களிலும் அகர வரிசையில் இவை ஒழுங்குபடுத்தப்பட்டு அவற்றுக்கான விளக்கமும் தரப்பட்டுள்ளன. இத்தொகுப்பாக்கம் முடிவுற்றபின்னர் பெறப்பட்ட மேலும் பல புதிய சொற்களின் திரட்டாக பக்கம் 181-230 வரையில் இடம்பெற்றுள்ள பின்னிணைப்பு 1 அமைகின்றது. சென்னைப் பெரகராதியில் யாழ்ப்பாண வழக்கு எனக் காட்டப்பெற்ற சொற்களின் தொகுப்பாக பின்னிணைப்பு 2 அமைகின்றது. இது பக்கம் 231-410 வரை காணப்படுகின்றது. மேலும், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களுக்கும் அப்பால் திருக்கோணமலை, வவுனியா, மன்னார், புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, மலையகம் போன்ற பிரதேசங்களில் பாரம்பரியமாக வாழும் இலங்கைத்தமிழரிடையேயும் பல சிறப்புத் தமிழ்ச் சொற்கள் வழக்கிலுள்ளன. இவையும் பிரதேச ரீதியில் தொகுக்கப்பெற்று இவ்வாய்வு முழுமையடையவேண்டும் என்ற வேணவாவை இந்நூல் ஏற்படுத்துகின்றது.