8462 வீரபாபுவின் குதிரை: சிறுவர் கதை.

அ.அருள் சுலக்ஷிகா. திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், இல. 37/7, மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு,  ஏப்ரல் 2011. (கொழும்பு 12: நிசான் பிரின்டர்ஸ், 64 என், பீர் சாகிபு வீதி).

x, 20 பக்கம், சித்திரம், விலை: ரூபா 100., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-52535-3-6.

திருக்கோணமலை ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரியின் ஆறாம் வகுப்பு மாணவியான அருள்சுலக்ஷிகா அருள்பாஸ்கரன் இக்கதையை எழுதியுள்ளார். யதார்த்த வாழ்வோடு இணைந்து தனக்கு வேண்டியதை முறையாகப் பெற்றுக்கொள்வது, பயிற்சியினாலும் உழைப்பினாலும் உரிய வெற்றி இலக்கையடைவது, அது தொடர்பான பிரச்சினைகளை மதிநுட்பத்துடன் கையாள்வது போன்ற வாழ்வியல் பாடங்களை இக்கதை சித்திர விளக்கங்களுடன் எமக்குத் தருகின்றது. குதிரையோட்டத்தில் ஆசை கொண்ட ஆனந்தபுரி பாபுவுக்குத் தந்தை குதிரை வாங்கித் தருகிறார். சிறந்த பயிற்சிபெற்று பாபு ஒரு குதிரையோட்ட வீரனாகிப் போட்டிகளில் வெல்கிறான். ஏற்கெனவே சிறந்த குதிரைவீரனாகக் கருதப்பட்ட ராஜாவையும் பாபு ஒருதடவை வெல்கிறான். தோல்வியை ஏற்கவிரும்பாத ராஜா அடுத்துவரும் போட்டியில் பாபுவை வெல்ல அவன் செல்லும் ஓட்டப் பாதையில் ஒரு குழியை வெட்டி மறைத்துவிடுகிறான். துர்அதிர்ஷ்டவசமாக ராஜாவின் குதிரையே அக்குழிக்குள் விழுந்து மீண்டும் தோல்வியைத் தழுவுகின்றது. வெற்றிபெற்ற பாபு வீரபாபு எனப் பெயர்பெறுவதுடன் ராஜாவின் தவறையும் மன்னித்து அவனுடன் இணைகிறான். அருள்சுலக்ஷிகா கேணிப்பித்தன் அருளானந்தத்தின் பேத்தியாவார்.

ஏனைய பதிவுகள்