தம்பித்துரை ஐங்கரன். தெல்லிப்பழை: குரும்பசிட்டி சன்மார்க்க சபை, 1வது பதிப்பு, 2011. (வவுனியா: மல்ரிவிஷன் அச்சுக் கலையகம்).
xxi, 76 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-53801-0-2.
குரும்பையூர் தம்பித்துரை ஐங்கரனின் 25 கவிதைகளைக்கொண்ட தொகுப்பு இது. முன்னர் இந்தப் பூக்களும் மணக்கும் என்ற கவிதைத் தொகுதியை 2005இல் வழங்கியவர். கவிதை என்பது உள்ளத்தில் ஊறி, மீறி வளர்ந்து வெளிப்படத் துடிக்கும் உணர்வு ஒன்றுக்கு அழகானதும் அளவானதுமான சொற்களால் கற்பனையும் விற்பன்னமும் நிறைந்த வடிவம் கொடுத்தல் என்று பொருள் கூறும் கவிஞர் வி.கந்தவனம், இந்நூலுக்கான தனது அணிந்துரையில் இந்த அளவுகோலால் அமாவாசை நிலவை அளந்து பார்த்தால் ஐங்கரனின் சிந்தனைத் தெளிவும், சீரிய தமிழும் கற்பனை வளமும், விற்பனைத் திறனும் வாசகர்களைக் கொள்ளைகொள்ளும் என்பதை அறுதியிட்டுச் சொல்லலாம் என்று குறிப்பிடுகின்றார். குரும்பசிட்டியில் 27.6.1975இல் பிறந்து உள்ளகப் புலப்பெயர்வின் காரணமாக இளவயதில் தாய்மண்ணைப் பிரிந்து வவுனியா-பண்டாரிக்குளத்தில் வசித்து வரும் இளம் கவிஞர் ஐங்கரன். மக்கள் வங்கி, வவுனியாக் கிளையில் பணிபுரியும் இவர் கணினித்துறையில் விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். 25 கவிதைகளைச் சுமந்துவரும் இந்நூல் சமூக அநீதிகளையும் குறைபாடுகளையும் மனிதநேயமற்ற உறவுகளையும் கண் முன்னே கொண்டுவருகின்றது.