ஜோன் மக்ஸ்வெல் கேற்சி (J.M.Coetzee) (ஆங்கில மூலம்), எஸ்.பொன்னுத்துரை (தமிழாக்கம்). சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 சக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு, 1வது பதிப்பு, மே 2011. (சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 சக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு).
272 பக்கம், விலை: இந்திய ரூபா 150., அளவு: 20×14 சமீ., ISBN: 978-81-89748-97-5.
தென்னாபிரிக்காவில் இன ஒதுக்கல் கொள்கை (Apartheid) கடைப்பிடிக்கப்பட்டு சிறுபான்மையினரான வெள்ளையரின் ஆட்சி பன்னெடுங் காலமாக நடைபெற்றது. சர்வதேச நிர்ப்பந்தங்களினால் பின்னர் நெல்சன் மண்டெலா தலைமையில் பெரும்பான்மைக் கறுப்பர்களின் ஆட்சி நிறுவப்பட்டது. இவ்வாட்சி மாற்றத்தின்போது நிகழ்ந்த முரண்பாடுகளினதும் சீர்கேடுகளினதும் சாட்சியாக வாழ்பவர் நூலாசிரியர் ஜோன் மக்ஸ்வெல் கேற்சி என்ற இலக்கியவாதி. ஆபிரிக்காவிலிருந்து இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதலாவது வெள்ளையர் இவர். இவரது பிரபல்யமான நாவலான Disgrace இங்கு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. பெரும்பான்மைக் கறுப்பின மக்களின் ஆட்சி ஏற்பட்டபின்னர் உருவாகிய யதார்த்தமான குழப்பநிலையை நிலைக்களனாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் இது. நில அபகரிப்பு, குற்றச்செயல்கள், கற்பழிப்புகள், போலிஸ் பாதுகாப்பின்மை, ஆகிய அவலங்களை மானக்கேடு தொட்டுச் செல்கின்றது. சூழ்நிலைகளை வாசகர் முன் நம்புதிறனுடன் முன்வைத்து, முடிவுகளை வாசகனுடைய சுதர்மத்திற்கு விட்டுவிடுதல் கேற்சி கடைப்பிடிக்கும் இலக்கிய நாகரீகமாகும். ஆட்சியாளரின் கண்டனத்தையும், எதிர்ப்பையும் பெற்றபோதிலும் இந்நாவல் Booker Prize எனப்படும் பரிசினை வென்றது. தடம்பதித்த ஆபிரிக்க இலக்கியப் படைப்புகள் தொடரில் வெளிவரும் நான்காவது நூல்.