8823 தேவகுமாரம்: இணுவில் சிவஸ்ரீ சி.குமாரராஜக் குருக்கள், ஸ்ரீமதி தேவசேனா தம்பதிகளின் விஜயரத சாந்திப் பெருவிழாச் சிறப்பு மலர்.

ப.சிவானந்த சர்மா (தொகுப்பாசிரியர்). சுன்னாகம்: சிவஸ்ரீ சி.குமாரராஜக் குருக்கள் குடும்பத்தினர், கந்தசாமி கோவிலடி, இணுவில் மேற்கு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2012. (யாழ்ப்பாணம்: ஷாம்பவி பதிப்பகம், கஸ்தூரியார் வீதி).

292 பக்கம், புகைப்படத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ.

நந்தன வருடம் ஆடிமாதம் 19ம் திகதி (03.08.2012) அன்று நடைபெற்ற விஜயரத சாந்தி விழாவின்போது வெளியிடப்பட்ட சிறப்பு மலர். விஜயரத சாந்தி நாயகர் சிவஸ்ரீ குமாரராஜக் குருக்கள் அவர்களது வாழ்க்கைச் சிறப்பு பற்றிய நயப்புரைகளும், அவருக்குச் சான்றோர் வழங்கிய ஆசிகளும் வாழ்த்துக்களும் வணக்கங்களும் பல்துறை ஆக்கங்களுமாக இம்மலரைச் சிறப்பித்துள்ளன. நான்கு இயல்களில் விரிந்துள்ள இம்மலரின் முதலாவது இயலில் இன்றெழுந்தருளப்பெற்ற பேறு என்ற தலைப்பில் விஜயரத சாந்தித் தம்பதிகளை வாழ்த்தி உலகெங்கணுமிருந்து வந்துசேர்ந்த நல்லாசிகளும் நல்வாழ்த்துக்களும் நயமான வணக்கங்களும் வாழ்த்துப் பாக்களும் இடம்பெறுகின்றன. சென்ற காலத்தின் பழுதிலாத் திறம் என்ற இயல் இரண்டில் விஜயரத சாந்தி காணும் வித்தகர் வாழ்வின் விழுமிய நினைவுப் பொக்கிஷங்கள் இடம்பெறுகின்றன. இனியெதிர் காலத்தின் சிறப்பு என்ற மூன்றாவது இயலில் வேத சிவாகமங்களும் தர்மசாஸ்திரங்களும், புராண, இதிகாசங்களும் திருமுறைகளும் காட்டுகின்ற எங்கள் சமய வாழ்வுக்கு உதவும் ஏற்றம் மிகும் தகவல்கள் பலவற்றின் இனிய தொகுப்பாக அமைகின்றது. எற்றைக்கும் திருவருள் என்ற நான்காவது இயலில் ஐயம்தீர்க்கும் கேள்வி பதில் பகுதியொன்று இடம்பெற்றுள்ளது.

ஏனைய பதிவுகள்