கார்டன் வைஸ் (மூலம்), கானகன் (தமிழாக்கம்). நாகர்கோயில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 2வது பதிப்பு, மார்ச் 2012, 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (சென்னை 600005: மணி ஓப்செட்).
309 பக்கம், விலை: இந்திய ரூபா 250.00, அளவு: 23×15 சமீ., ISBN: 978-93-80240-94-7.
இலங்கைப்போர்பற்றியும் விடுதலைப்புலிகளின் இறுதிப்போராட்டக் களம் பற்றியும் The cage என்ற தலைப்பில் Gordon Weiss எழுதிய ஆங்கில நூலின் தமிழாக்கம் இது. யுத்த காலத்தின் கடைசி இரண்டு ஆண்டுகளான 2007-2009 காலகட்டத்தில் இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றியவர் கார்டன் வைஸ். யுத்தத்தின்போது ஏற்பட்டமனித உரிமை மீறல்கள் குறித்த ஐ.நா.சபையின் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களைச் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வழியாகவும் இதர வழிமுறைகள் வாயிலாகவும் திரட்டிய நான்கு முக்கிய நபர்களில் வைசும் ஒருவர். சாதாரண மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டதை உலகின் பார்வைக்குக் கொண்டுவந்ததன் காரணமாக இலங்கையின் கடும் விமர்சனத்துக்குள்ளானவர். கூண்டு இந்த நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலை என மானுட வரலாற்றில் அழுத்தமாகப் பதிவுசெய்யும் மே 2009 வன்னிப் பேரவலத்தின் முக்கியமான சாட்சியங்களில் ஒன்றாக வெளிவந்துள்ளது. சாட்சியமற்ற போர் எனப் பலராலும் விவரிக்கப்பட்ட இந்தப் பேரழிவைத் தெரிந்துகொண்டும் தடுத்து நிறுத்த முடியாத சர்வதேச சமூகம், ஐக்கிய நாடுகள் அவை, போன்றவற்றின் மீது ஆழமான விமர்சனங்களை முன்வைக்கின்ற நூலாசிரியர் இந்தப் பேரழிவில் இந்திய அரசின் பங்கையும் பொருத்தமான இடங்களில் விபரிக்கின்றார்.