7122 திருமுறைப் பண்ணிசைத் திறனாய்வு.

இ.வடிவேல். திருக்கோணமலை: இ.வடிவேல், பாக்கியபதி, 15, வித்தியாலயம் ஒழுங்கை, 1வது பதிப்பு, ஆண்டு விபரமில்லை. (திருக்கோணமலை:  ஸ்ரீ கணேச அச்சகம், 5. வித்தியாலயம் வீதி).

90 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

திருமுறைப் பண்ணிசை என்றால் என்ன? அது எவ்வகையில் பயன்படுத்தப்படுகின்றது? அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? அதைப் பயன்படுத்துவதால் வரும் நன்மைகள் என்ன என்பன போன்ற கேள்விகளுக்கு இந்நூல் விடையளிக்கின்றது. திருமுறைப் பண்களின் தொன்மை, திருமுறை என்றாலென்ன, வேதமும் தமிழ் வேதமும், திருமுறைகள் எவை, திருமுறைப் பண்வகை, திருமுறையில் இசைத்தமிழ், திருமுறையில் சுவை (இரதம்) நயம், ஆலயங்களில் தோத்திரமும் சாஸ்திரமும், திருமுறையில் பண்கள் இசைக் கருவிகள் பற்றிய குறிப்புகள், திருமுறையில் இயற்றமிழ், திருமுறைப் பாவமைப்பும் பயனும், திருமுறை வாரிதியில் ஒருசில துளிகள் (திருக்கோணமலைப் பதிகம், நமச்சிவாயப் பதிகம், திருநூற்றுப் பதிகம்,  கோளறு பதிகம்,  சூலை நீக்கிய பதிகம்) ஆகிய பன்னிரு தலைப்புகளில் இத்திறனாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேவார முதலிகளாகிய மூவரும் பாடியருளிய திருமுறைகளில் காணப்படும் பண்களே பண்டைய தமிழிசை நூல்களில் கூறப்பட்டுள்ள பண்களாகும் எனக்கூறும் ஆசிரியர், பிற்காலத்தில் தமிழ்ப் பண்ணிசை பின்தள்ளப்பட்டு 16ஆம் நூற்றாண்டுக்குப்பின் தஞ்சையை ஆண்ட மகாராஷ்டிர மன்னர்களாலும், மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களாலும் கர்நாடக இசை முன்னணிக்குக் கொண்டுவரப்பட்டதாகக் கணிப்பிடுகின்றார். சைவப்புலவர் பண்டிதர் இ.வடிவேலு முன்னர் திருக்கோணமலை மாவட்டத் திருத்தலங்கள், கோணேசர் கோவிலின் வரலாறு ஆகிய நூல்களால் அறியப்பெற்றவர்.  (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31727).

ஏனைய பதிவுகள்