க.சி.குலரத்தினம். கொழும்பு 10: குமரன் புத்தக இல்லம், B3-G3 ரம்யா பிளேஸ், 1வது பதிப்பு, 2010. (கொழும்பு 10: குமரன் புத்தக இல்லம், B3-G3 ரம்யா பிளேஸ்).
vi, 74 பக்கம், விலை: ரூபா 175., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-246-7.
சைவத்தையும் தமிழையும் இரு கண்களெனப் போற்றி வாழ்ந்த சைவப்புலவர் க.சி.குலரத்தினம் உயர்தர வகுப்பில் இந்து நாகரீகத்தை (1979ம் ஆண்டிலும் 1980ம் ஆண்டிலும்) ஒரு பாடமாகப் பயிலும் மாணவர்கள் நலன் கருதி பல பகுதிகளைக் கொண்ட இந்து நாகரிகம் என்ற நூலை எழுதி வெளியிட்டார். அத்தொகுதியில் இடம்பெற்ற இந்து சமயத்தின் இக்காலச் சீர்திருத்த இயக்கங்கள் என்ற பாடம் இப்பொழுது தனி நூல் வடிவில் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது. இந்நூலின் அறிமுகத்தைத் தொடர்ந்து, பிரம்ம சமாஜம், பிரார்த்தனை சமாஜம், ஆரிய சமாஜம், ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தியடிகள், தத்துவஞான சபை, விஸ்வஹிந்து பரிஷத் ஆகிய தனித்தலைப்புகளின்கீழ் இந்நூலின் உள்ளடக்கம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. சீர்திருத்த இயக்கங்களின் முக்கிய அம்சங்களைத் தெளிவான மொழிநடையில் ஆசிரியர் இந்நூலில் எளிமையாக வழங்கியுள்ளார். க.சி.குலரத்தினம் (1916-1994) யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் பிறந்தவர். பரமேஸ்வராக் கல்லூரியில் கல்வி கற்றபின்னர் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையிலும், திருநெல்வேலி சைவாசிரியர் பயிற்சிக் கலாசாலையிலும் பயின்றவர். திருநெல்வேலி செங்குந்தா இந்துக் கல்லூரி, சைவப்பிரகாச வித்தியாசாலை உட்பட பல கல்லூரிகளில் ஆசிரியராகப் பணியாற்றியபின்னர் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். யாழ்ப்பாணத்தில் மில்க்வைற் செய்திகளின் கௌரவ ஆசிரியராக இருந்து ஒரு வர்த்தக இதழை சுவைமிகு அறிவியல் இதழாக நடத்திக்காட்டியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.