த.ஜெயபாலன். லண்டன் E11 3JX: தேசம் பதிப்பகம், Thesam International Tamil Magazine, P.O.Box 35806,1வது பதிப்பு, செப்டெம்பர் 2010. (அச்சக விபரம் தரப்படவில்லை).
48 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×12 சமீ.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் எதிர்காலம் என்ற மேலட்டைத் தலைப்புடன் வெளியிடப்பட்டுள்ள இந்நூல், (http://thesamnet.co.uk/?p=22391) தேசம்நெற் இணையத்தளத்தில் வெளியாகிய ஒரு கட்டுரையின் நூல்வடிவமாகும். Guillain-Barre Syndrome என்பது மனித நரம்புத் தொகுதியின் முடிவுப் புள்ளிகளைத்தாக்கி படிப்படியாக மனிதனை செயலிழக்கச்செய்யும் கொடிய நோயாகும். ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தில் குறிப்பாக யாழ்ப்பாணப் புத்திஜீவிகள் மத்தியில் அவர்களது சுதந்திரமான சிந்தனைத் திறனைத் தாக்கி அவர்களைச் செயலிழக்கப்பண்ணி ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் செயல்திறனையே அழிக்கும் ஆபத்தான சமூக அரசியல் போக்கினை மேற்கண்ட நோயுடன் ஒப்பிட்டு இவ்விமர்சனக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. தமிழ்ப் புத்திஜீவிகளின் சமூக அரசியல்போக்குகளை வெளிப்படையாகவும், நேரடியாகவும், சமூக சுத்திகரிப்புச் சிந்தனையுடனும் இனம்கண்டு சாடுவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.