இ.சு.முரளிதரன். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஐப்பசி 2019. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). vii, 54 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ., ISBN:978-955-0958-18-4. தமிழ் ஆசிரியராக முரளிதரன் பல்வேறு காலங்களில் தோன்றிய கவிதை மரபுகளை மாணவர்களுக்கு கற்பித்து வருவதால் கவிதைகளுடனான இணக்கம் இவருக்கும் ஏற்பட்டு கலையுருக்காட்டியினுள் வீழ்ந்த சொற்கள் நுண்ணதிர்வால் பன்முகத் தோற்றத்தில் இவருக்குத் தென்படுகின்றன. அதுவே இவரால் காத்திரமான கவிதைகளைப் படைப்பதற்கான கற்பனா விரிவினை ஏற்படுத்தியுள்ளது. அந்த உணர்விலேயே இக்கவிதைத் தொகுப்பின் தலைப்பினையும் “கலையுருக்காட்டி” என்று வைத்திருக்கிறார். இத் தொகுப்பில் சங்கப் பத்து, நீதிப் பத்து, பாதீனியம், பள்ளி எழுச்சி, நானோப்பதிகம், புட்பக விமானம் பலம்பல், வான்புகழ், தமிழ் அந்தாதி, மால் மாலை மாற்று, நடராசா திருத்தசாங்கம், எறிகணை விடு தூது, சிலேடை வெண்பா, காடு, குறும்பா, கும்மி, ஹைக்கூ, மலர்கள், இங்கே எங்கே, துயரின் பாடல், மிகப் பொருத்தமான விடை ஆகிய கவிதைகள் இடம்பெற்றுள்ளன. சங்ககால கவிதை மரபினைப் பின்பற்றி இக்கவிதைகள் ஒவ்வொன்றும் வடிக்கப்பட்டிருப்பினும் அவற்றின் பேசுபொருள் சமகாலமாகவே உள்ளன. இந்நூல் ஜீவநதி வெளியீட்டகத்தின் 129ஆவது பிரசுரமாக வெளிவந்துள்ளது.