அப்துல் காதர் லெப்பை (மூலம்), அமீர் அலி (பதிப்பாசிரியர்). அவுஸ்திரேலியா: கலாநிதி அமீர் அலி, School of Social Inquiry, Murdoch University, Western Australia 6150இ 1வது பதிப்பு, மார்ச் 1986. (புதுவை 605001: ஆண்டவர் அச்சகம், 140, அம்பலதாடையர் மடத்து வீதி). 42 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×13 சமீ. பழமையில் வேரூன்றி நின்றுகொண்டு புதுமையைப் புறக்கணிக்காது மனிதாபிமானத்தோடு காலத்துக்கேற்ற கருத்துக்களைத் தன் செய்யுள்களின் வழியாக எமக்கு வழங்கியுள்ளார் கவிஞர் அப்துல் காதர் லெப்பை. கடவுள்- இயற்கையும் அதன் சட்டமும்-மெய்யறிவு-மனிதன் என்ற சட்டத்தினுள் தனது தத்துவார்த்தக் கவிதைகளை இங்கு எமது ரசனைக்கு விட்டுள்ளார். நவ உலகின் நுட்பங்களும் கலைகளும் தத்துவங்களும் சட்டங்களும் மானிடத்தின் சாதனைகள் என்பதில் உறுதியான நம்பிக்கை பூண்ட எமது கவிஞர், மனிதன் தன் சுயத்துவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என விரும்புகின்றார். சுயமற்ற சருகுகளாகவும் சுழலும் பொம்மைகளாகவும் தமது வாழ்வை வாழ்ந்துவிட்டு தாம் வாழ்ந்த சுவடுகளே தெரியாது உலகைவிட்டுப் போய்விடும் மனிதர்களையிட்டு இவர் அதிருப்தி கொள்கிறார். முன்னோர் வகுத்த வழியினை மந்தைகளாகப் பின்பற்றும் முறைமையை இவர் வெறுக்கின்றார். மனித சுயத்துவத்தை வலியுறுத்தும் கவிஞர் முன்னோர் வகுத்த நெறிகளை வழிகாட்டிகளாகவே கொள்ளவேண்டும் என்கிறார். சுருக்கமாகக் கூறின் தெளிவற்று ஒளியற்ற ‘நான்”களை ஒழித்து, தெளிவுற்று ஒளிர்வுற்ற “நான்”களையே உருவாக்க இந்நூல் வழியாக கவிஞர் அப்துல் காதர் லெப்பை முனைகின்றார்.