சிவ மகாலிங்கம் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சு, 2வது உலக இந்த மாநாடு, யாழ்ப்பாண மாநிலக் குழு, 1வது பதிப்பு, 2003. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டர்ஸ், 424 காங்கேசன்துறை வீதி).
(2), 90 பக்கம், வண்ணத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.
இந்துசமயத்தின் சீரிய தொன்மைகளை உலகறியச்செய்யும் முயற்சியாக இலங்கை இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சு ஒழுங்குசெய்திருந்த இரண்டாவது உலக இந்து மகாநாடு 2003 மே மாதம் 2 முதல் 6ம் திகதி வரை இலங்கையின் தலைநகரிலும் வேறு பிராந்திய நகரங்களிலும் கோலாகலமாக நடைபெற்றது. தமிழிலும் ஆங்கிலத்திலும் உலக அறிஞர்கள் எழுதியனுப்பிய ஆய்வுகள் மாநாட்டு அரங்குகளில் படிக்கப்பெற்று சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது. இம்மகாநாட்டின் நிகழ்ச்சிகளை யாழ்ப்பாணக் குடாநாட்டில் சிறப்பாக முன்னெடுப்பதற்கு அமைக்கப்பெற்றதே யாழ்ப்பாண மாநிலக் குழுவாகும். யாழ்ப்பாணப் பிராந்தியத்தில் 9.5.2003 தொடங்கி 10.5.2003 வரை இருநாள் தொடர் நிகழ்வாக நடத்தி முடிக்கப்பெற்ற சிறப்பு நிகழ்ச்சிகளில் எழுச்சி ஊர்வலம், திருமுறை அரங்கு, மகளிர் அரங்கு, இளைஞர் அரங்கு, விசேட உரைகள், கவியரங்கு, மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இம்மாநாட்டு நிகழ்வுகளை ஆவணப்படுத்திவைக்கும் நடவடிக்கையொன்றும் யாழ்ப்பாண மாநிலக்குழுவால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அறிக்கைகளையும் நிகழ்வுப் புகைப்படங்களையும், சிறப்புச் சமயக் கட்டுரைகளையும் உள்ளடக்கிய அவ்வாவணமே இந்நூலாகும். யாழ். பிராந்தியக்குழுவின் தலைவராக ப.கோபாலகிருஷ்ண ஐயரும், அரச அதிபர் செ.பத்மநாதன் இணைத்தலைவராகவும், துணைத்தலைவர்களாக பேராசிரியர்கள் சி.க.சிற்றம்பலம், அ.சண்முகதாஸ், கலாநிதி நா.ஞானக்குமரன் ஆகியோரும் பணியாற்றினர். இக்குழுவின் செயலாளராக சிவ.மகாலிங்கம், உப செயலாளராக புலவர் செ.கந்தசக்திதாசன் பொருளாளராக சதாசிவ ஐயர் ஆகியோரும் பணியாற்றினர்.