அனித்தா யோகராசா. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xvi, 135 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-427-0.
இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையின் சிறப்புக் கலை இறுதி வருடப் பரீட்சையின் ஒரு பகுதியை நிறைவுசெய்யும் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் நூல்வடிவமாகும். இவ்வாய்வு, பண்பாடு-ஓர் அறிமுகம், யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய பண்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்துகின்ற காரணிகள், மிருசுவில் கிராமத்தின் பண்பாடு: அன்றும் இன்றும், யாழ்ப்பாணப் பாரம்பரிய பண்பாட்டின் எதிர்காலம் ஆகிய நான்கு பிரதான தலைப்புகளின்கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பண்பாட்டு அடிப்படையில் யாழ்ப்பாணத்திற்கு 2500 ஆண்டுகளுக்கு குறையாத தொன்மையான, தொடர்ச்சியான பாரம்பரிய வரலாறுண்டு. இந்நூலாசிரியை மறைந்துபோகும் எமக்குரிய பாரம்பரிய மரபுகளையும், சடங்குகளையும், நம்பிக்கைகளையும், எமது பாரம்பரிய பாவனைப் பொருட்களையும் அவற்றிற்குரிய பழமையான தமிழ் சொற்களையும் தனது ஆய்வினூடாக வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளார். சமகாலத்தில் எமது சமூகத்தால் மறக்கப்பட்டுவரும் தொட்டுணர முடியாத மரபுரிமைகள் (intangible Heritage) பலவற்றை இந்நூலில் விரிவாகத் தொட்டுச் சென்றிருக்கிறார். நூலாசிரியை, யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழைச் சேர்ந்தவர். அங்கு ஸ்ரீகணேசவித்தியாலயத்தில் ஆரம்பக்கல்வியையும் பின்னர் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும், யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்று, அங்கு உதவி விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார்.