கம்பதாசன் (மூலம்), சிலோன் விஜயேந்திரன் (தொகுப்பாசிரியர்). சென்னை 600005: ஸ்டார் பிரசுரம், 72, பெரிய தெரு, திருவல்லிக்கேணி, 1வது பதிப்பு, மார்ச் 1988. (சென்னை 600005: எஸ்.கே.ஆர்ட் பிரின்டர்ஸ், திருவல்லிக்கேணி).
(4), 146 பக்கம், விலை: இந்திய ரூபா 12., அளவு: 17.5×12.5 சமீ.
தமிழகத்தின் தென் ஆர்க்காடு மாவட்டத்தின் திண்டிவனம் பகுதியில் உள்ள உலகாபுரம் கிராமத்தில் பிறந்த அப்பாவு என்ற இயற்பெயர் கொண்ட, கவிஞர் கம்பதாசன் (15.9.1916-23.5.1973) எழுதிய சிறுகதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவருகின்றது. இதில் மறைந்த நட்சத்திரம், நினைவு முகம், ஒன்பதாம் நம்பர் கட்டில், விதி, முத்துச் சிமிக்கி, கடவுளின் விரோதி, புதுவெள்ளம், மௌனச் சிரிப்பு, தியாகம், தந்தை, குழந்தை உள்ளம், வெகுமதி, பலி, வழிகாட்டி, குழந்தையின் மதம், ஞானஸ்தன், முதல் முத்தம் ஆகிய 17 கதைகள் இடம்பெற்றுள்ளன. ஏற்கெனவே விஜயேந்திரன் இவரது படைப்புகளை கம்பதாசன் திரை இசைப் பாடல்கள், கம்பதாசன் காவியங்கள், கம்பதாசன் கவிதைத் திரட்டு, கம்பதாசன் நாடகங்கள், கம்பதாசன் கவிதா நுட்பங்கள்ஆகிய தலைப்புகளிலும் தொகுத்ததுடன் கம்பதாசனின் வாழ்வை கவிஞர் கம்பதாசன் வாழ்வும் பணியும் என்ற நூலின் மூலமும் தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்தியிருந்தார். தமிழகத்தில் வாழ்ந்து மறைந்த யாழ்ப்பாணத்தவரான விஜயேந்திரன் 1946இல் பிறந்தவர். 16வது வயதிலேயே எழுத்துத் துறைப் பிரவேசம் கண்டவர். இலக்கியவாதியாக மட்டுமன்றி தமிழகத்தின் திரைப்பட நடிகராகவும் இருந்து 65க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் வில்லன் வேடமேற்று நடித்தவர். நவரச தனிநடிப்பிலும் புகழ்பெற்றவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 99450).