சொபக்கிளிசு (கிரேக்க மூலம்), இ.இரத்தினம் (தமிழாக்கம்). கொழும்பு 4: செய்யுட்களம், 149/3, காலி வீதி, 1வது பதிப்பு, 1969. (தெல்லிப்பழை: குகன் அச்சகம், காங்கேசன்துறை வீதி).
xii, 64 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 22×14 சமீ.
முகவுரை, இயற்பெயர் விளக்கம், தீபசின் தொல்கதை, மன்னன் ஈடிபசு ஆகிய நான்கு பிரிவாக கிரேக்க நாடகமான இந்நூல் விரிகின்றது. தீபசு நாட்டின் மன்னன் இலயசு, இராணி யோகதா. அந்நாட்டின் தெய்வ வாக்குப்படி இவர்களுக்குப் பிறக்கப் போகும் ஆண் குழந்தை தன் தந்தையைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றி, தாயை மறுமணம் செய்வான் என்று சொல்லப்படுகின்றது. மன்னன் இலயசு அவ்வாக்கினை நம்பி தனக்குப் பிறந்த ஆண் மகனை காட்டு மலையில் கைவிட்டு விடுகிறான். அக்குழந்தையை ஓர் இடையன் கண்டெடுக்கிறான். குழந்தை பல கைகள்மாறி இறுதியில் கொரிந்து நகருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அந்நகரை ஆளும் மன்னனிடம் குழந்தை ஈடிபசு என்ற பெயருடன் வளர்கின்றது. முன்னர் அவனுக்கிடப்பட்ட தெய்வ வாக்கு, அங்கும் மீண்டெழ, அவனை அது வருத்துகிறது. அன்பான தந்தையை (வளர்ப்புத்தந்தை) பிரிந்து, ஈடிபசு அந்த நாட்டை விட்டே வெளியேறுகின்றான். கானக வழியில் ஒரு கிழவனும் அவனது ஏவலர்களும் எதிர்கொள்கின்றனர். இடையில் ஏற்பட்ட பிணக்கில் கிழவனையும் ஏவலர்களையும் கொல்கிறான். இறுதியில் தீபசு நாட்டுக்கே அவனறியாமல் வந்து சேர்கிறான். அங்கே அந்நாடடை சிபிஞ்சு என்ற கொடியவன் வல்லாட்சி புரிந்துவருகிறான். ஈடிபசு, சிபிஞ்சு அளிக்கும் புதிர்களை விடுவித்து அவனது அசுர பிடியிலிருந்து நாட்டைக்காப்பாற்றுகிறான். அங்கு கைம்பெண்ணாக இருந்த அரசியான யோகதாவையே மணக்கிறான். பல பிள்ளைகளைப் பெற்று பல்லாண்டு வாழும் தருணத்தில் தீபசை பஞ்சமும் நோயும் வாட்டுகிறது. மன்னன் இலயசைக் கொன்றவன் தண்டிக்கப்படவில்லையாதலில் தெய்வநிந்தனைக்கு நாடு உள்ளாகிவிட்டதென்று மீண்டும் குறி சொல்லப்படுகின்றது. அப்போது தானே அப்பணியை முன்னெடுக்க மன்னன் ஈடிபசு முயல்கையில் தானே அந்த குற்றவாளி என்றுணர்கிறான். தன் மனைவியே தன் தாயென்றும் காட்டில் கொன்ற கிழவனே தன் தந்தையென்றும் அறிந்துகொள்கின்றான். நாட்டின் நன்மைக்காகவும், தான் செய்த தவறுக்காகவும் தானே தன் கண்களைக் குருடாக்கி நாடு துறக்கிறான். பின்னர் ஏதென்சில் அவன் முதுமையில் இறக்கிறான். இதுவே மன்னன் ஈடிபசுவின் கதை. நாடகாசிரியர் சொபக்கிளிசு, நாடகத்தில் கதையை ஈடிபசு மன்னன் காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்திலிருந்து (கதையின் இடைநடுவில்) தொடங்கி, முன்கதையை உரையாடல்களின் மூலம் நகர்த்துகின்றார். பின்னர் இலயசைக் கொன்றவன் யாரெனக் கண்டறியும் நிகழ்காலத்தில் கதை வந்தடைந்து ஈடிபசின் பின்னாளைய செயற்பாடுகளாக நாடகத்தின் பின்பகுதி பயணிக்கின்றது. கிரேக்க அறிஞர் அரிஸ்டோட்டில் விதந்துபோற்றிய நாடகக்கதை என்ற வகையில் இது மிகப் பழமையும் மதிப்பும் பெற்ற நாடகம் என்ற வரலாற்றுக் கணிப்பைப் பெற்றது.