ஈழவேந்தன். கொழும்பு: ஈழவேந்தன், 1வது பதிப்பு, 1966. (கொழும்பு 13: இரஞ்சனா அச்சகம், 98 விவேகானந்தா மேடு).
(6), 16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13 சமீ.
26.11.1930இல் தன் எண்பதாவது அகவையில் மரணமடைந்த சேர். பொன் இராமநாதனின் பல்துறைப் பணிகள் பற்றி ஆசிரியர் அவ்வப்போது சுதந்திரன், வீரகேசரி, தினகரன், ஈழநாடு, செய்தி, விவேகானந்தன் முதலான இதழ்களில் எழுதிய கட்டுரைகளின் சிறு தொகுப்பாக இக்கட்டுரை வெளிவந்துள்ளது. சேர் பொன் இராமநாதனின் இறுதிக்கால அரசியல் பணிகள் பற்றி அவ்வளவாகப் பேசப்படுவதில்லை என்ற குறைபாட்டைப் போக்கும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இராமநாதனுடைய கருத்துக்களையும் கூற்றுக்களையும் இக்கால அரசியல் பின்னணியிற் பதித்துத் தமிழ் மக்களைத் தம் வீழ்ச்சி குறித்து ஆசிரியர் சிந்திக்கவும் செய்துள்ளார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் பிறந்த ஈழவேந்தன், சென் ஜோன்ஸ் கல்லூரியில் கற்றுத் தேர்ந்தவர். இலங்கை மத்திய வங்கியில் தொழில்புரிந்து வந்த வேளையில் மத்தியவங்கி தமிழ் ஊழியர்சங்கத்தைத் தொடங்கி அதன் தலைவராக விளங்கினார். பின்னர் தந்தை செல்வாவின் தமிழரசுக்கட்சியில் இணைந்துகொண்ட இவர், காவலூர் நவரத்தினம் தமிழரசுக் கட்சியுடன் கொண்ட கருத்து முரண்பாடு காரணமாகத் தமிழர் சுயாட்சிக் கட்சியை உருவாக்கியபோது அதில் தன்னையும் இணைத்துக்கொண்டவர். பின்னர் ஆயுதப் போராட்டக் குழுவான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் சேர்ந்து திம்புப் பேச்சுவார்த்தைக் காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்துகொண்டார். இந்திய அமைதிப்படை இலங்கையிலிருந்து வெளியேறியபோது காசி ஆனந்தன் போன்றோருடன் இந்தியாவுக்குச் சென்று தமிழகத்தில் தங்கியிருந்து அரசியல்பணிகளில் ஈடுபட்டவர். அங்கிருந்து பின்னர் இந்திய அரசினால் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டவர். பின்னர் இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டபோது நியமனப் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டு பாராளுமன்ற உறுப்பினரானவர். தற்போது கனடாவில் வாழ்ந்து வருகின்றார்.