9627 பக்கவாத்தியங்கள் இல்லாத பாட்டுக்கச்சேரி.

அல்லை க.வ.ஆறுமுகம். (புனைபெயர்: ஈழமாஜினி). யாழ்ப்பாணம்: பண்டிதர் அல்லை க.வ. ஆறுமுகம், முதலாம் வட்டாரம், அல்லைப்பிட்டி, 1வது பதிப்பு, டிசம்பர் 1993. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி).

xvi, 59 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.

பக்கவாத்தியங்கள் இல்லாத பாட்டுக் கச்சேரி, சமைப்போரும் சுவைப்போரும், வெந்நீரும் நெருப்பை அவிக்கும், என் செயலும் இறைவன் செயலும், புலமையின் பள்ளி பெண், கரும்பு தின்னக் கூலி: கைவழியக் கேட்கின்றார், தவிக்கிறது தார்மீகம் சிரிக்கிறது மனச்சாட்சி, பெட்டி உரசியும் குச்சி தீப்பற்றும், சீதனச் சாத்தான், ஏனோ முடியவில்லை என்பனபோன்ற தலைப்புகளில் அமைந்த கவிதைகளின் தொகுப்பு இது. 70 வயதைத்தாண்டியும் இளமைச் சுறுசுறுப்புடன் இயங்கிவரும் முதிய இளைஞரான ஆசிரியரின் முதலாவது கவிதைத் தொகுதி ‘அடைப்புக்குறிகள்’ என்ற பெயரில் 1987இல் வெளிவந்தது. இது இவரது இரண்டாவது கவிதைத் தொகுதியாகும். கவிஞரின் இலக்கியப் பணியைப் பாராட்டி தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகத்தினர் 1991இல் பத்தாயிரம் ரூபாவை ஆசிரியருக்கு அன்பளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இத்தொகுதியிலுள்ள கவிஞரின் கவிதைகள் 1987க்குப் பின்னர்  முரசொலி, திசை, சஞ்சீவி ஆகிய பத்திரிகைகளில் எழுதப் பெற்றவையாகும். தலைப்புக்கவிதை பணத்துக்குப் பெறப்படும் பொருளுக்குள்ள மவுசு அதே பொருள் இலவசமாக வழங்கப்படும் போது  இருப்பதில்லை என்ற தொனிப்பொருளில் அமைந்துள்ளது. பெரும்பாலான கவிதைகள் கவிஞர் கண்டவற்றையும்  செய்திகளாகக் கேட்டவற்றையும் செய்தி விமர்சனமாகக் கவிதைப்பாணியில் வடித்துள்ளார். ‘நாட்டில் நடப்பதாய் நான் கேள்விப் பட்டதனை/நம்பாமல் நானே சென் றுண்மையென்று கண்டதையே/உள்ளதை உள்ளபடி ஒலிக்கும் முரசொலிக்கு/ செய்தி விமர்சனம்போல் செய்யுளில் அனுப்பிவைத்தேன்’ என்று இதனை எங்கள் பெண்கள் துணிந்துவிட்டார் என்ற கவிதையில்  அவரே குறிப்பிட்டுள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  101982). 

ஏனைய பதிவுகள்