மனோன்மணி சண்முகதாஸ். சென்னை 600 113: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சி.ஐ.டி.வளாகம், தரமணி, 1வது பதிப்பு, 2000. (சென்னை 600 004: United Bind Graphics, 101-D Royapettah High Road, Luz, Mylapore).
(12), 367 பக்கம், விலை: இந்திய ரூபா 80.00, அளவு: 22×14 சமீ.
சங்க இலக்கிய அகப்பாடல்களின் உரைப் பொருத்தப்பாடு என்ற உப தலைப்புடன் வெளிவந்துள்ள குறந்தொகை ஒரு நுண்ணாய்வு என்ற இந்நூல் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்368ஆவது வெளியீடாகும். சங்க இலக்கியத்தின் அகப்பாடல்களான குறுந்தொகையை தன் ஆய்வுக்கான கருப்பொருளாக ஆசிரியர் கொண்டுள்ளார். சங்க இலக்கியங்களின் தோற்றம் காலம், அகம், புறம் பற்றிய பாகுபாட்டின் மரபு விளக்கங்கள், சங்கப் பாடலின் தனித்துவம், பிற மொழி அகப்பாடல்களின் ஒப்பீடு, மரபுநிலை வளர்ச்சி, பழைய உரைகள், உரைநடைப்பாங்கு, உரைகளின் தன்மைகள், இலக்கிய நிலை, இலக்கண நிலை, உரை முரண்பாடுகள், உரைப் பொருத்தமற்ற பாடல்களுக்கு அமைய வேண்டிய விளக்கங்கள் முதலானவற்றைத் தெளிவாக ஆய்வு செய்துள்ளார். பழைய உரைகள்- புதிய உரைகள் என்பவை பாடல்களின் முழுமையான பொருள்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில், முரண்பட்டுள்ளவற்றைப் பல்வேறு காலங்களில் தோன்றிய உரைகளின் சான்றுகள் மூலம் விளக்கியுள்ளார். இவை அனைத்தும் ஆய்வு வரலாறும் ஆய்வுச் சிக்கல்களும், சங்க இலக்கிய அகப்பாடல்களின் வரையறை, குறுந்தொகைப் பாடல்களின் தன்மையும் அமைப்பும், சங்க இலக்கிய அகப்பாடல்களின் உரைகள், குறுந்தொகையின் உரைப் பொருத்தப்பாடு: நுண்ணாய்வு, சங்க அகப்பாடல்களுக்கான புதிய உரை ஆகிய ஆறு இயல்களின் வழியாக விளக்கப்பட்டுள்ளன.