ச.வயித்தியலிங்கம் (மூலம்), வ.ஜெயதேவன், இரா.பன்னிருகைவடிவேலன் (பதிப்பாசிரியர்கள்). சென்னை 600096: நோக்கு, 259 நேரு நகர், 2ஆவது முதன்மைச் சாலை, கொட்டிவாக்கம், 1வது பதிப்பு, 2013. (சென்னை 600 005: கணபதி பிராசஸ்).
158 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21×14 சமீ., ISBN: 978-81-908490-4-3.
தமிழ் மொழியில் அகராதிகளின் அறிமுகத்துக்கு முன்னர், அகராதியின் பணியை செய்யுள் உருவிலமைந்த நிகண்டுகளே நிறைவேற்றிவந்தன. தமிழ் அகராதித் துறையில் முன்னோடியானவையும் காத்திரமானவையுமான பல முயற்சிகளில் ஈடுபட்டவர்களாக ஈழத்தவர்கள் இருந்துள்ளனர் என்பதற்கு இந்த நிகண்டு ஆதாரமாகின்றது. வல்வெட்டித்துறை ச.வைத்தியலிங்கம் அவர்களால் இந்நிகண்டு ஆக்கப்பெற்றது. உலகளாவியரீதியில் தமிழ் மொழியில் இதுவரை 35 நிகண்டுகள் வரை கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றாக சிந்தாமணி நிகண்டும் அமைந்துள்ளது. இந்நூலின் மூலப்பதிப்பு, சென்னை தண்டையார்பேட்டை பு.சு.கிருஷ்ணசாமிப்பிள்ளையவர்களால், இலட்சுமி விலாச அச்சுக்கூடத்தில் தாது வருடம் (1876) சித்திரை மாதம் பதிப்பிக்கப்பட்டது. 137 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளிவரும் இப்புதிய தமிழகப்பதிப்பில் பதிப்பாசிரியர்களால் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொருளடக்கம், பதிப்புரை ஆகியன இப்பதிப்பில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. முதற் பதிப்பில் காப்புச் செய்யுள், அவையடக்கச் செய்யுள், சிறப்புப் பாயிரச் செய்யுள்கள் சந்தி பிரிக்கப்பெறாமல்இருந்தன. இப்பதிப்பில் அவை அவ்வாறு சந்தி பிரிக்கப்பெறாமலும், படிப்பவர்களுக்கு எளிமையாக இருக்கும் பொருட்டு, அச்செய்யுள்களின் கீழ் சந்தி பிரித்தும் தரப்பட்டுள்ளன. நிகண்டுச் செய்யுள்கள் சந்தி பிரிக்கப்பெறாமல் ஒரு பக்கத்திலும் அதன் பின்புறம் அவற்றுக்கு உரையும் முதல் பதிப்பில் இடம்பெற்றிருந்தன. ஆனால் இப்பதிப்பில் ஒவ்வொரு நிகண்டுச் செய்யுளும் சந்தி பிரிக்கப்பெற்று அச்செய்யுளின் அடியிலேயே அதன் உரை அமைக்கப்பெற்றுள்ளது. இப்பதிப்பின் இறுதியில் இந்நிகண்டில் பொருள் கூறப்பட்டுள்ள சொற்கள் அனைத்தும் (3088 சொற்கள்) பயன்பாட்டு எளிமை கருதி அகராதிவடிவில் தரப்பட்டுமுள்ளன.