பிரியா மகாலிங்கசிவம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: நாடக மன்றம், சைவ மங்கையர் வித்தியாலயம், 23, உருத்திரா மாவத்தை, 1வது பதிப்பு, மே 2012. (கொழும்பு 6: விகடன் அச்சகம், 541/2 சீ, காலி வீதி, வெள்ளவத்தை).
(8), 150 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 20.5×14.5 சமீ.
கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலய நாடக மன்றத்தினர் 2009ஆம் ஆண்டிலிருந்து தாம் மேடையேற்றிய நாடகப் பிரதிகளைத் தொகுத்து இந்நூலில் வழங்கியிருக்கின்றனர். இவற்றை சிறுவர் நாடகங்கள், சமூக நாடகங்கள், இலக்கிய நாடகங்கள் என மூன்று வகைக்குள் பிரித்தடக்கியுள்ளனர். சிறுவர் நாடகங்கள் வழமையான கற்பனாவாத தேவதைக் கதைகளை அடியொற்றியிராமல், அவற்றை நிராகரித்து- நடப்புலகின் அவலங்களையும் யதார்த்தங்களையும் அவர்களது பார்வையில் உணரச்செய்து அவ்வுலகை அவர்கள் எதிர்கொள்ளும் பக்குவத்தை அவர்களிடம் தோற்றுவிக்க முனைகின்றன. சிறுவர் நாடகப் பிரிவில் அகந்தை கொண்ட மயிலார், கற்றுக்கொண்ட பாடங்கள், தந்திரங்களும் இராஜதந்திரங்களும் ஆகிய மூன்று நாடகங்களும், சமூக நாடகப் பிரிவில் எல்லாம் மண், உயிரின் செலவு, ஒட்டிக்கொண்ட ஒவ்வாமைகள், சம்காரம், ஈரந்தேடும் இதயங்கள் ஆகிய ஐந்து நாடகங்களும், இலக்கிய நாடகங்கள் என்ற மூன்றாவது பிரிவில் கவரி வீசிய காவலன், கர்ணன் ஆகிய இரு நாடகங்களும் இடம்பெற்றுள்ளன.