பா.சிவராமகிருஷ்ணன். கொழும்பு 13: ஞான குருபர நிலையம், 82/5 ஆட்டுப்பட்டித் தெரு, 1வது பதிப்பு, டிசம்பர் 1970. (கொழும்பு 13: ஆனந்தா அச்சகம், 82/5 ஆட்டுப்பட்டித் தெரு).
64 பக்கம், விலை: ரூபா 1.50, அளவு: 18.5×13 சமீ.
ஐம்பெருங் காப்பியங்களில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் கதையாலும் காலத்தாலும் தொடர்பு கொண்டவை. மணிமேகலை, சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியான கதைப்போக்கைக் கொண்டது. முன்னையது கண்ணகி, கோவலன், மாதவி வரலாறு கூற, பின்னையது கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மணிமேகலையின் வரலாற்றைக் கூறுகின்றது. இவ்விரு காப்பியங்கள் பற்றியும் அவ்வப்போது ஆசிரியர் எழுதி, பத்திரிகைகளிலும் சிறப்பு மலர்களிலும் வெளியிட்ட கட்டுரைகளில் தேர்ந்த 11 கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. சிலப்பதிகாரத்தில் கோவலன் நிலை, கோவலன் காட்டிய பழி, சிலப்பதிகாரம் காட்டும் நுதல்விழி நாட்டத்து இறையோன், சிலப்பதிகாரம் காட்டும் முருகப் பெருமான், சிலப்பதிகாரம் காட்டும் சூரிய வழிபாடு, இரட்டைக் காப்பியங்கள் கூறும் இந்திரவிழா, சிலப்பதிகாரம் காட்டும் புராண இதிகாசங்கள், மணிமேகலை காட்டும் புராண இதிகாசங்கள், கண்ணகி திருமணம், இளங்கோ கண்ட இன்னிசைக் கருவிகள், மணிமேகலை காட்டும் பௌத்த நெறி ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 77315).